உச்சகட்ட பதற்றம்..! அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் புதின் அனுமதி!
நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்ததற்கு ரஷ்ய அதிபர் பதிலடி கொடுத்துள்ளார். எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரஷ்யாவின் புதுப்பிக்கப்பட்ட கொள்கையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட அணு ஆயுத கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை குறிப்பிட்டு, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தங்களின் ராணுவ ஆதரவை விரிவுபடுத்தியுள்ளதால், தேசிய பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வழங்கிய தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு வாஷிங்டன் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொள்கையில் தேவையான அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாகவும், சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையின் உயர்நிலைக் கூட்டத்தில் அணு ஆயுத கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு அணு ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்கினால், கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விமானங்கள், கப்பல் மற்றும் டிரோன்கள் மூலம் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா மீது நடத்தும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்களை கொண்டு, உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்யப் படைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை தாண்டி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அனுமதிக்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் ஆயுதங்களை உக்ரைனுக்கு வெளியே ரஷ்யா எல்லைக்குள் தாக்குதல் நடத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் நேற்று திங்கள்கிழமை அனுமதி அளித்தார்.