ஃபார்மா கம்பெனியில் பயங்கர வெடிவிபத்து... 15 பேர் பலி..!
ஆந்திர அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் எஸ்சென்ஷியா என்ற பெயரில் ஃபார்மா கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த கம்பெனியில் உள்ள ரியாக்டர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புதி மோகம், என்.ஹரிகா என்று அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் ரியாக்டருக்கு மிக அருகில் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
படுகாயம் அடைந்த 18 பேர் அருகிலுள்ள என்.டி.ஆர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்சென்ஷியா நிறுவனத்தில் மதிய உணவு உண்ணும் நேரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் வெளியில் சென்றிருந்தால் பெரிய அளவிலான உயிர் சேதங்களை தவிர்க்க முடிந்தது.
அந்தப் பகுதி முழுவதும் சில மணி நேரங்களுக்கு கரும்புகையுடன் காணப்பட்டது. ஃபார்மா கம்பெனியில் நடத்த வெடிவிபத்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அருகிலுள்ள கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. பலருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.