சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து... ஒருவர் பலி...!

சிவகாசி அருகே ஆணையூர் புது காலனியில் நீராத்தி லிங்கம் என்ற ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 15-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 80 ஆண் பெண் தொழிலாளர்கள் பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்றாடம் தயாரிக்கப்படும் பட்டாசுகளை இருப்பு வைக்கும் அறையின் அருகே தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பட்டாசு மூலப் பொருள்களில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கி திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த 33 வயதான சுரேஷ் வயது என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான பால்பாண்டி என்பவர் படுகாயமடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை பல்வேறு அரசு துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு தொழிற்சாலை விபத்து பற்றி மா ரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.