வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்க்... சம்பவ இடத்திலேயே உடல் கருகி வாலிபர் பலி!

திருச்சி, பாகனூரைச் சேர்ந்த ஆரோக்கிய இருதயசாமி (32) என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவிலில் வசித்து வரும் இவரது நண்பரைப் பார்ப்பதற்காக நேற்று மதியம் ஆரோக்கிய இருதயசாமி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, திருச்சியை நோக்கி திண்டுக்கல்லில் இருந்து டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஆரோக்கிய இருதயசாமியின் மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி பயங்கர வேகத்தில் மோதியது. மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதியதும், வண்டியின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் மோதிய வேகத்தில் ஆரோக்கிய இருதயசாமி தூக்கி வீசப்பட்டதுடன், அவரது உடல் முழுவதும் தீப்பற்றியது.
பெட்ரோல் டேங்க் வெடித்ததால், ஆரோக்கிய இருதயசாமி, உடல் முழுவதும் கருகி, உயிருக்கு போராடினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த விரைந்து சென்றனர். பின்னர் ஆரோக்கிய இருதயசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.