அரசியலில் இருந்து முன்னாள் முதல்வர் விலகல்..!

கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவர்களில் பா.ஜ.,வின் சதானந்தகவுடாவும் ஒருவர். முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், தற்போது பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இவர், ஹாசனில் நேற்று வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.
பின், சதானந்த கவுடா கூறியதாவது: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்துள்ளேன். என்னுடைய 30 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், பா.ஜ., எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது.
பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், 20 ஆண்டுகளாக எம்.பி.,யாகவும், ஓராண்டு முதல்வராகவும், 4 ஆண்டுகள் கட்சியின் மாநிலத் தலைவராகவும், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஏழு ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன்.
இதைவிட அதிகமாக ஆசைபட்டால், மக்கள் என்னை சுயநலவாதி என்று அழைப்பர். 2021ல் மத்திய அமைச்சரவை மாற்றும்போது, பிரதமர் அறிவுறுத்தல் பேரில் பதவியில் இருந்து விலகினேன்.தேசிய தலைவர்கள், ம.ஜ.த.,வை கூட்டணியில் இணைத்துக் கொண்டனர். ஆனால், பா.ஜ., தொண்டர்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்து வழிகாட்டும்படி தலைவர்களை கேட்டுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர், மாநில தலைவர் நியமிக்காதது கூச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதன் வாயிலாக, 2024 லோக்சபா தேர்தலில், சதானந்தகவுடா போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.