பரபரப்பான அரசியல் சூழல்..! சந்திரபாபு நாயுடுவுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு..!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. அதேபோல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி 234 இடங்களை பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றாலும் பாஜக 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால் கடந்த முறை போல தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது. கூட்டணியில் 16 தொகுதிகளில் வென்ற தெலுங்கு தேசம், 12 இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளத்தில் ஆதரவு முக்கியமாக மாறியது. அதே சமயம் இரண்டு கட்சிகளையும் இழுக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டன.
இந்தியா கூட்டணிக்கு பெரிய வெற்றியை கொடுத்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாடு - புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களையும் இந்தியா கூட்டணி வென்றது.ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது, பீகாரின் நிதீஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்றுள்ளது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு என்பது பாஜகவுக்கு மிக முக்கியமானது. இவர்களுடன் வேறு சில சிறிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்தால் இந்தியா கூட்டணியாலும் ஆட்சியமைக்க முடியும்.
நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் தங்கள் கட்சிகளின் ஆதரவை பாஜகவுக்கு வழங்குவதாக எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தனர். இதனையடுத்து, வரும் 8ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் சந்திரபாபு நாயுடுவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துக்கொண்டது அரசியல் அரங்கில் முக்கியமாக மாறியுள்ளது. தேஜகூ கூட்டணி கூட்டத்தை முடித்துக்கொண்டு ஐதராபாத் செல்வதற்காக சந்திரபாபு நாயுடு டெல்லி விமான நிலையம் வந்தார். அதே சமயம் இந்தியா கூட்டணி கூட்டத்தை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நிலையில், இருவரும் காத்திருப்பு அறையில் சந்தித்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞரின் கலைஞரின் நீண்ட நாள் நண்பரான சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்து என்னுடைய வாழ்த்தை தெரிவித்தேன். சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் இடையே உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை வெளிப்படுத்தினோம்.
சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிட்டு நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.