1. Home
  2. தமிழ்நாடு

பால் வியாபாரியால் பரபரப்பு.. கன்றுகளின் உடல்களுடன் சட்டசபை முன்பு தர்ணா..!

பால் வியாபாரியால் பரபரப்பு.. கன்றுகளின் உடல்களுடன் சட்டசபை முன்பு தர்ணா..!


புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், 3 கன்று குட்டிகள் திடீரென உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், இறந்த 3 கன்று குட்டிகளின் உடல்களுடன் சட்டசபைக்கு வந்தார். அந்த கன்றுகளின் உடல்களை சட்டசபை நுழைவு வாயில் முன் போட்டு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சட்டசபை காவலர்கள் உடனே நுழைவு வாயிலை இழுத்து மூடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு வந்து ராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அந்த கன்றுகளின் உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தலைமை தபால் நிலையம் அருகே கொண்டு சென்றனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் மூலமாக அந்த கன்றுகளின் உடல்களை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், “மழைக் காலத்திற்கு முன்பே மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட வேண்டும். காலம் கடந்து தடுப்பூசி போடப்பட்டதால்தான் கன்று குட்டிகள் இறந்துவிட்டன. அதிகாரிகள் அலட்சியத்தால்தான் இது நடந்துள்ளது.

ஏற்கனவே உயிரிழந்த 4 கன்று குட்டிகளை அடக்கம் செய்துவிட்டேன். தற்போது மேலும் 3 கன்றுகள் உயிரிழந்தன. அதனை அடக்கம் செய்ய என்னிடம் பணமில்லை. எனவே இறந்த கன்று குட்டிகளின் உடல்களை அரசிடம் ஒப்படைக்க வந்தேன்” என்றார்.

பால் வியாபாரியின் திடீர் தர்ணாவால் சட்டசபை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like