தவெக கூட்டத்தில் பரபரப்பு..! கேள்வி கேட்ட பெண் அறையில் அடைப்பு!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. இதனையொட்டி, விஜய் சார்பில் இம்மாநாட்டிற்கு அவரது ரசிகர்களையும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களையும் குடும்பத்துடன் நேரில் அழைக்க முடியாத நிலையில், அவர் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஒவ்வொரு மாவட்டமாக நேரில் அனுப்பி அழைப்பு விடுக்க சொல்லியிருக்கிறார் விஜய்.
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், கீழே நின்ற பெண் புஷ்பா, விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த தனது அண்ணன் தங்கதுரைக்காக வாக்குவாதம் செய்தார்.
தன்னுடைய இடத்தை விற்று, சொத்தை எல்லாம் விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தார். கட்சி தொடங்கிய பிறகு அவரை ஏன் கட்சி ஒதுக்கி வைத்திருக்கிறது. கட்சி ஆரம்பித்ததும் அவருக்கு பொறுப்புகள் வழங்கவில்லை?’’ என்று கேட்டகவும், அதற்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தார் புஸ்ஸி ஆனந்த்.
உடனே பவுன்சர்கள் ஓடிவந்து அந்தப்பெண்ணை இழுத்துச்சென்று கண்ணாடி அறையில அடைத்தனர். வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் தடுத்துவிட்டனர்.
இதனால் கும்பகோணத்தில் நடந்த தவெக கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.