ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் எல்லாம் இருக்கிறது : உதயநிதி குறித்து மன்சூர் அலிகான்..!
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் மன்சூர் அலிகான். தற்போது சினிமாவில் பெரிய அளவில் அவருக்கு முக்கியத்துவம் ஏற்படவில்லை. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு இணையாக நடித்திருப்பார். அதன் பிறகு நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் தனது கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக முக்கியமான ஐந்து தொகுதிகளை தேர்தெடுத்திருப்பதாக அவரே கூறினார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் தனது இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டத்தில்இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை கோடி கோடியாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் என்று ஆளும் திமுக கட்சியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், அவரிடம் அவர் நடித்த சரக்கு படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சரக்கு படத்தை ரூ.4 கோடி போட்டு எடுத்தேன். ஆளும்கட்சியின் ஆதிக்கம் காரணமாக எனக்கு போதுமான திரையரங்கு கிடைக்கவில்லை. தம்பி உதயநிதியை பலமுறை நேரில் போய் பார்த்தேன்.அவர் ஓடிடியில் வெளியிடுவோம், தியேட்டர்கள் கிடைக்கச் செய்வோம் என கூறினார். ஆனால்,அதன் பிறகு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதே மாதிரி ஓடிடியிலும் வெளியிட முடியவில்லை. அந்த நேரம் பார்க்க கேப்டன் விஜயகாந்தின் மறைவு வேறு நடந்தது. ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாம் இருக்கிறார்கள். முன்னமாதிரி எதுவும் இல்ல. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கு. இதை அப்படியே அனுமதிக்க முடியாது. அதை இனிமேல் பார்த்துக்கலாம்” என தெரிவித்தார்.