உதயநிதி மகன் வந்தாலும் அமைச்சராக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அமைச்சர்கள் அடிமையாக உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர்களாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் திமுக வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்புக்கு கண்டனமும், விமர்சனங்களையும் தொடுத்து வருகின்றனர். அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி வந்தாலும் அமைச்சராக ஏற்றுக் கொள்வோம் என்று திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கூறும் அளவிற்கு அடிமையாக உள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மழைநீர் வடிகால் பள்ளங்களை பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து மழை நீர் வடிகால் பணிகளை செய்யாவிட்டால் சென்னை மாநகரம் மழை நீரில் தத்தளிக்கும். செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உள்ளது. செந்தில்பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வரும்போது, முதல்வர் ஸ்டாலின் வரவேற்று தியாகம் பெரிது என்று குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையின்படி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். உச்சநீதிமன்ற நிபந்தனையை காவல்துறை கண்காணித்து நிபந்தனை மீறினால் நடவடிக்கை எடுக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வரே பாராட்டி உள்ளார், செந்தில் பாலாஜி அமைச்சராக ஆகிவிட்டார். அப்பொழுது நிபந்தனைகளை செந்தில்பாலாஜி நிபந்தனையை மீறும்போது நடவடிக்கை எடுக்குமா? என்று ஐயப்பாடு உள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஒரு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவார் என்று அமைச்சர்கள், நிர்வாகிகள் குறிப்பிட்டு வந்தார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளார். உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தேனாறும் பாலாறும் ஓடும். முதல்வர் பரிந்துரை செய்தால் ஆளுநர் சத்திய பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்பது அவருடைய கடமை அதை தான் செய்துள்ளார். திமுகவிற்காக பலர் உழைத்துள்ளனர். சிறை சென்று பல சித்திரவதைகளை அனுபவித்துள்ளனர். மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள், நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சராகி உள்ளார். தற்பொழுது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆகியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி வந்தாலும் அமைச்சராக ஏற்றுக் கொள்வோம் என்று திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கூறும் அளவிற்கு அடிமையாக உள்ளனர்.
ஓபிஎஸ் என்பவர் அதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர்; அவர் கட்சியில் கிடையாது கட்சி இரண்டாக, மூன்றாக போய்விட்டது என்று பேச வேண்டாம்; நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. ஓபிஎஸ் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது; சட்டரீதியாக என்ன உள்ளது அதை பாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.