1. Home
  2. தமிழ்நாடு

முதல் ஆளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த இபிஎஸ்..!

1

மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்கள் முன்பாக அதாவது கடந்த 4 ஆம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். குறிப்பாக, ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து நெகட்டிவ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். முன்னதாக, பீகார் மாநிலத்தில், நீட் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மாணவர்கள் சிலரும் பிடிபட்டனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளது

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. இதுபோக, வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.


இதற்கிடையே, ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இக்குளறுபடிகள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகளும், அஇஅதிமுக தொடர்ச்சியாக கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது

இந்த ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like