பொய்களை மட்டுமே பேசுபவர் தான் தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார் - வெளுத்து வாங்கிய இ.பி.எஸ்.!
சேலம் ஓமலூரில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தி.மு.க., அரசை குற்றம் சாட்டினால், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை என்னை குறை சொல்கிறார். அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைத்துள்ளார். மத்திய அரசு நாணயம் வெளியிட்டால் தான், புகழ் கிடைக்கும் என்பது போல அண்ணாமலை பேசுகிறார். அவர் எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி பேசுகிறார். பொய்களை மட்டுமே பேசுபவர் தான் தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார்.
மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து, பாஜ.,வை அழைத்து நாணய வெளியீட்டு விழாவை தி.மு.க., நடத்தியது. தி.மு.க., பா.ஜ.,வும் வெளியில் எதிர்ப்பது போல் இருந்தாலும் உள்ளே கூட்டணி வைத்துள்ளனர். தி.மு.க.,வைப் போல, பா.ஜ.,வும் இரட்டை வேடம் போடுகிறது. இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களை தி.மு.க., ஏன் நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அழைப்பிதழ் எனக்கு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது.
மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், பத்து ஆண்டுகளில் ரூ.165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.