1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நிற்காதது குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் விளக்கம்..!

1

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். அதையடுத்து விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். டாக்டர்.அபிநயா நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவின் பின்வாங்கலால் ஜனநாயக தேசிய கூட்டணியின் பாமகவுக்கு அல்லது நாம் தமிழர் கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரைக்குச் சென்றிருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நிற்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போன்று, இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்தினர்.

காவல்துறையும் அரசு அதிகாரிகளும் இதற்கு துணை நின்றனர். அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு செய்தனர். ஆனால் தேர்தல் ஆணையமோ அதைக் கொஞ்சம்கூட கண்டு கொள்ளவில்லை.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. எனவேதான் அதிமுக விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது. அத்துடன், மக்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் எனத் தேர்தலைப் பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Trending News

Latest News

You May Like