தி.மு.க., ஆட்சிக்குத் தேதி குறிச்ச இ.பி.எஸ்..! இன்னும் 19 அமாவாசை தான்..!
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் மீது பொய் வழக்கு போட்டுத் தி.மு.க., அரசு முடக்க நினைக்கிறது. தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.
சட்டம் ஒழுங்குச் சீர்கேடு
சென்னையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட மாநாகராட்சி பொறியாளர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியுடன் போடப்படும் வழக்கால் அரசு அதிகாரிகள் மத்தியில் தொய்வு ஏற்படும். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டன.
உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்- ஒழுங்குச் சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை என்று திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.
மக்களின் கவனத்தை திசைதிருப்ப லஞ்ச ஒழிப்புத்துறையை முதல்வர் ஸ்டாலின் ஏவி விட்டிருக்கிறார். அ.தி.மு.க., வை முடக்கி எதிர்க்கட்சியின் செயல்களைத் தடுத்து நிறுத்தி விடலாமெனத் தி.மு.க., நினைக்கிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களைத் தடுத்து நிறுத்திவிடலாம்.
கடத்தலின் கேந்திரமாகத் தமிழகம் விளங்கும் கேவலத்தை மக்களிடமிருந்து மறைத்துவிடலாமென முதல்வர் ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார். தி.மு.க., ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன.சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.