துரைமுருகன் சொன்ன பிறகு தான் சபாநாயகர் பேச அனுமதி தருகிறார் - இ.பி.எஸ்., குற்றச்சாட்டு..!

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த, இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிரதான எதிர்கட்சி பேச அனுமதி கொடுக்காமல் மற்றொரு கட்சி உறுப்பினரை பேச சபாநாயகர் அழைக்கிறார்.
நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி ஒரு பிரச்னையை எழுப்பினால் அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் மரபு. துரைமுருகன் சொன்ன பிறகு சபாநாயகர் பேச அனுமதி தருவது ஒரு தலைப் பட்சமானது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வது தான் முதல்வரின் வேலை. அவருக்கு மக்களின் பிரச்னையை பேச நேரமில்லை.
கருப்பு சட்டை அணிந்து வருவதை வரவேற்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவருக்கு மறதி இருப்பது போல் தெரிகிறது. 1999ம் பார்லிமென்ட் தேர்தலில் யாருடன் சேர்ந்து போட்டியிட்டீர்கள். முதலில் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பிறகு தான் அடுத்தவர் குறித்து குறைகளை சொல்ல வேண்டும். அவையில் எங்களுக்கு பேச அனுமதி கொடுத்து இருந்தால் திராணி இல்லை.
எதிர்க்கட்சியாக இருந்த போது நாட்டின் பிரதமர் வந்த போது கருப்பு பலூன் விட்டீர்கள்.ஆளும்கட்சியாக வந்த பிறகு அதே பிரதமருக்கு வெண் குடை பிடித்தீர்கள். வெண் குடை வேந்தன் முதல்வர். வெள்ளை கொடி பிடித்த வேந்தன். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. கால போக்கில் கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்துபோகும். அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் உஷாராக இருங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.