1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது..!

1

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

இதற்கிடையே அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடைவிதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். அதில், விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை எதுவும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும், தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டேன் என ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கட்டாய நடவடிக்கையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பாதுகாப்பை வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் தங்களால் எந்த உத்தரவையும் வழங்க முடியாது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். 12 அதிகாரிகள்  கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதனால் கெஜ்ரிவால் கைதாகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை எந்த நேரமும் கைது செய்யலாம் எனத் தகவல் வெளியாகிய நிலையில் அவரின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். கெஜ்ரிவாலின் கைது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like