ஆட்சிக்கு வரும் முன் பகையாளி.. வந்த பின் விருந்தாளியா..?: கேட்கிறார் சீமான்..!

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா வரும் ஜனவரி 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, கல்லூரிகளை திறந்துவைக்க இருக்கிறார். இதற்காக அவர் ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். விருதுநகரில், பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள், அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள்.
அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி..? பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.