புதுச்சேரியில் புதிய கோஷம்! அரசு பணிகளில் 5000 பேர்!

புதுச்சேரி அரசு தற்போது 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட வம்சாவழி இளைஞர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி தன்னுரிமை கழகம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக. புதுச்சேரி தன்னுரிமை கழகத்தின் தலைவர் து.சடகோபன் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசுப் பணிகளுக்கு 5000 பேர்களை அமர்த்தப் போவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இது வரவேற்கக்கூடியச் செய்தியாகும்.ஆட்சி முடிய சில மாதங்களே இருக்கின்ற நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பைக்கண்டு இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலங்கடந்த அறிவிப்பாக இருந்தாலும் சில யோசனைகளைப் புதுச்சேரித் தன்னுரிமைக் கழகம் சார்பில் வைக்கின்றோம்.
கடந்தகாலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சர் ந.ரங்கசாமி பல ஆயிரம் பேர்களை வேலைக்கு அமர்த்தினார். ஆட்சியின் முடிவில் தேர்தல் நெருங்கிய காலத்தில் ஆட்கள் வைத்தல் கூடாது என்று அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்த்ததோடு நில்லாமல் தேர்தல் ஆணையத்தை அணுகித் தடைவாங்கியது.வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் 5 ஆண்டுகள் முடியப்போகிற நிலையில் இன்றுவரையிலும் வேலையில் சேர முடியவில்லை.
அப்போதைய முதலமைச்சர் செய்த அதே தவறை இன்றைய முதலமைச்சரும் செய்யப்போகிறார். நடுவில் சிக்கித் தவிக்கின்றவர்கள் வேலையில் சேர்ந்தும் சேராத இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ள இளைஞர்களே. உறுதியற்ற இந்த வேலைகளை நம்பிய இளைஞர்கள் ஆண் பெண் என எல்லோரும் திருமணம் ஆனவர்களாகவும் உள்ளனர். அவர்கள் எல்லோரும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். குறிப்பாக பொதுப்பணித் துறையில் அமர்த்தப்பட்டவர்கள் பெருந்துன்பத்தை அடைந்து வருகிறார்கள்.
புதுச்சேரியில் ஆட்சி முடியும்தருவாயில் இதே போன்ற தவறுகளை ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அரசின் வரவு செலவுத் திட்டங்களைச் சரியாக மதிப்பீடு செய்யாமல் வெறும் ஆட்களை அமர்த்துவது ஒருவித ஏமாற்று வேலையாகும். இதனால் கடன் வாங்கிச் செலவுச்செய்து பெருந்தொகையை இழந்தவர்கள் இழக்கப்போகின்றவர்கள் என்ற நிலைகளே ஏற்படுகின்றன.
ஏறத்தாழ 10,000 வேலைகள் காலியாக இருப்பதாக அரசு, அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.இது உண்மையாக இருப்பின் அந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அப்படி நிரப்பப்படும் வேலைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.புதுச்சேரியைப் பூர்விகமாகக் கொண்ட வம்சாவழி இளைஞர்களுக்கே வேலைகள் கொடுக்கப்பட வேண்டும்.மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமைக் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் கேட்டுப் போராடிவருகிறார்கள். அதையே நாங்களும் கேட்கிறோம்.
புதுச்சேரி சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசம்.இங்கு வேலை வாய்ப்புகள் என்பது மிகமிக குறைவு.ஆகவே மக்கள் அரசையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.ஆகவே இப்போது அரசு தீர்மானித்துள்ள கல்வி-வேலைகளுக்கான கால நிர்ணயத்தை வரையறை செய்திருக்கிற என்கிற அரசாணை உள்ளூர் மக்களுக்குச் செய்யப்படுகிற பேரிழப்பாகும்.
20 ஆண்டுகட்கு முன்பு வந்தவர்களுக்குக் குடியுரிமை அளிப்பது ஏற்புடையதல்ல.ஆகவே 2019 ஆணையை உடனே ரத்துச் செய்துவிட்டு ஒருபிரிவு மக்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிற 1964 ஆம் ஆண்டு கால நிர்ணயத்தைப் பொதுவாக எல்லாப் பிரிவு மக்களுக்கும் தீர்மானிக்க வேண்டும் என்று புதுச்சேரித் தன்னுரிமைக் கழகம் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.