வேலைவாய்ப்பு : 10,906 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு!

தமிழகத்தில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 10,906 இடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,784 இரண்டாம் நிலை காவலர்கள், 6,545 சிறப்புப்படை காவலர்கள், 119 சிறைக்காவலர்கள், 458 தீயணைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதே நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் உயர் கல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கும் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 26 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துதேர்வைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், உடற்திறன் போட்டிகளுக்கு 15 மதிப்பெண்களும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு 5 சிறப்பு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in