செம குஷியில் ஊழியர்கள்..! 100 சதவீத வேரியபிள் பே வாரி வழங்கிய டிசிஎஸ் நிறுவனம்..!
டாடா குழுமத்தின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு முழு வேரியல் பே செலுத்திய தொடர்ச்சியான இரண்டாவது காலாண்டு இதுவாகும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக நிறுவன செலவுகள் குறைக்கப்படும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி பெறுபவர் முதல் C2 மற்றும் C3 நிலை வரையிலான ஊழியர்களுக்கு 100 சதவீதம் வேரியபிள் பே வழங்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மூத்த மேலாண்மை மற்றும் தலைமைப் பதவிகளில் (C4, C5 மற்றும் அதற்கு மேல்) உள்ள ஊழியர்களின் வேரியபிள் பே அந்நிறுவனத்தின் முந்தைய கொள்கையைப் போலவே அவர்களின் வணிகப் பிரிவின் செயல்திறனைப் பொறுத்து வழங்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. மீதமுள்ள ஊழியர்களுக்கு அவர்களின் வணிகப் பிரிவின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வேரியபிள் பே வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 12,760 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி வெறும் 1.3 சதவீதம் மட்டுமே. இது ரூ. 63,437 கோடியாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனம் டாலர் அடிப்படையிலான வருவாயில் 3.1 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. இது கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு மிகக் குறைந்த வளர்ச்சியாகும். இதுபோன்ற சூழலிலிம், ஏப்ரல் - ஜூன் மாதங்களில் டிசிஎஸ் நிறுவனம் 5060 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது. அதோடு, மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை 6.13 லட்சமாக உயர்த்தியது. இந்த காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணிநீக்க விகிதம் 13.8 சதவீதமாக இருந்தது. இது தொழில்துறை சராசரியை விடக் குறைவுதான்.
இதுபோல கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், டிஜிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கே. கிருத்திவாசன் கூறியுள்ளார்.