பிரபல ஹோட்டலில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து....ஒருவர் பலி!

சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றது, அதில் ஒன்றான தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லிப்ட் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த லிப்ட் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் திடீரென அந்த லிப்ட் பழுதாகி நின்றது.இதனை அப்புறத்திவிட்டு புதிய லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்துல் காதர் என்பவர் அந்த லிஃப்டை அகற்றுவதற்காக, ஷியாம் சுந்தர்(34), வினோத் உள்ளிட்ட ஊழியர்களை நேற்று விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஷியாம் சுந்தர் கீழே நின்று கொண்டிருந்தபோது, வினோத் உள்ளிட்டோர், மாடியில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக, லிஃப்ட் அறுந்து, கீழே நின்று கொண்டிருந்த ஷியாம் சுந்தர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த ஷியாம் சுந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனுபவம் இல்லாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பிறருக்கு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் 2 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தலைமை பொறியாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல நட்சத்திர ஓட்டலில் லிப்ட் அறந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.