பாதுகாப்புக்காக பீரோவில் மின் இணைப்பு.. மறந்து தொட்ட மூதாட்டி பரிதாப பலி..!
சீர்காழி அருகே, வீட்டின் பாதுகாப்புக்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானியர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில், குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
தன்னுடைய வீட்டின் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கியுள்ளார்.
இன்று காலை, மின் இணைப்பைத் துண்டிக்க மறந்து பீரோவை திறக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அன்பழகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வெகு நேரம் கடந்தும் அன்பழகி வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் இருந்த சீர்காழி போலீசார் அன்பழகியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.