1. Home
  2. தமிழ்நாடு

இனி மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் மின்வாரியத்துக்கு அதிக அபராதம்..!

1

வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சமீபத்தில் ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில், மீண்டும் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் இறந்த சம்பவத்தை, சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் காலதாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது. நிதி ஒதுக்கீடுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், விரைவில் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கருவிகள் பொருத்தப்பட்டால், யானைகள் மின்வேலியில் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் உடனே துண்டிக்கப்படும். முக்கிய வழித்தடங்களில், இந்த கருவிகள் பொருத்தப்படும் என்றார்.

இதையடுத்து, யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை எனில், நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும், மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Trending News

Latest News

You May Like