ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது..!
ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில், ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய சூழலில், நிற்காமல் சிக்னலைத் தாண்டிச் சென்றது.
அதில் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதன் காரணமாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டுள்ளதால், சென்னையில் இருந்து புறப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில், தமிழகம், வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மேலும், சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அலுவலகம் மற்றும் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் விபத்துக்கு அதிக பனிமூட்டம் காரணமாக, சிக்னல் தெரியவில்லையா? அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவுக் காரணமா? என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆவடி ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத், “மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கவனக்குறைவுக் காரணமா? என விசாரணை நடத்தப்படுகிறது. ஒரு புறநகர் ரயில் வழித்தடம் மட்டுமே முடங்கியுள்ளது. 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியுள்ளன. மற்ற வழித்தடங்களில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில ரயில்கள் இயக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.