தமிழ்நாட்டில் புதிய அறிவிப்புகள், அரசாணைகளை வெளியிடக் கூடாது - தேர்தல் ஆணையம்..!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் அரசாணை தொடர்பான பதிவேடுகள் அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும்கூட அரசாங்க அறிவிப்புகள், அரசாணைகள் வெளியிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இம்முறை இத்தகைய சர்ச்சைகள், விதிமீறல்களைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி அரசாணை வெளியிட்ட பின் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும்.
“மேலும், அதை நகல் எடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி அதன் மூலம் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கலாம்,” என்று சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வருகை தரத் தொடங்கி உள்ளனர்.
முதற்கட்டமாக 25 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
துணை ராணுவப் படையினர் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தேர்தல் பணியில் ஈடுபடுவர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகே, அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.