1. Home
  2. தமிழ்நாடு

ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

1

அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சை நீடித்த போது அக்கட்சியின் இரட்டை இலை சின்னமும் ஆட்டம் கண்டது. யாருக்கு ஒதுக்க வேண்டும், யாருக்கு ஒதுக்கக் கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக காய் நகர்த்தினர். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்படத் தொடங்கியது. ஆனால் பழைய வழக்குகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் ஒன்று.

இவர் தனது மனுவில் அதிமுகவில் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் எதிராக சிலர் நடந்து கொண்டனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது முடியும் வரை அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆனையத்தில் அளித்துள்ள மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சூரியமூர்த்தி வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால் இவருக்கு இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று வாதிடப்பட்டது.

எனவே தங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும். அதன்பிறகே இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வலியுறுத்தினர். இதையடுத்து எதிர்மனுதாரரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சூரியமூர்த்தி ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் டிசம்பர் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

Trending News

Latest News

You May Like