பல்லடம் அருகே நிலத்தை மீட்க போராடிய மூதாட்டி மரணம்..!

திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்த மாரப்பன் மனைவி செல்லம்மாள், 90. இவருக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலம் பல்லடம் மற்றும் மாதப்பூர் கிராமங்களில் இருந்தன. இவற்றுக்கு செல்லம்மாள் தான் ஒரே வாரிசு.
இந்நிலையில் 1983ல் போலி ஆவணங்களை பயன்படுத்தி சிலர் மோசடி பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த செல்லம்மாளின் வாரிசுகள் இழந்த சொத்துகளை மீட்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.நேற்று முன்தினம் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, வருவாய் துறையினர் செல்லம்மாளுக்கு கடிதம் அனுப்பினர்.
வயோதிகம் காரணமாக படுத்த படுக்கையாக இருந்த செல்லம்மாளை, இவரது வாரிசுகள் ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். விசாரணைக்கு அழைப்பு விடுத்த மண்டல துணை தாசில்தார் பெரியசாமி அலுவல் பணி தொடர்பாக சென்னை சென்றதை தொடர்ந்து பொறுப்பு அதிகாரிகள் விசாரித்தனர். இதை மறுத்து மூதாட்டியின் வாரிசுகள் வாக்குவாதம் செய்தனர்.
செல்லம்மாளின் மகன் சண்முகசுந்தரம் கூறுகையில், 'தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான என் தாய் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். சொத்துகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். லஞ்சமும் கேட்டனர். போலி பத்திரத்தை ரத்து செய்து சொத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட செல்லம்மாள், நேற்று காலை அவரது வீட்டில் இறந்தார். 'செல்லம்மாளின் உயிரிழப்புக்கு வருவாய்த்துறை அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும்; உடனடியாக மோசடி பத்திரத்தை ரத்து செய்து தர வேண்டும்' என அவரது வாரிசுகள் வலியுறுத்தியுள்ளனர்.