பிரதமரின் 'ரோடு ஷோ'வில் பங்கேற்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் காரகட்டு பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி . இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வருவதற்குமுன் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஏறி 'ரோடு ஷோ' நடத்தினார். அவரை காண சாலையின் இரு புறமும் பா.ஜ.க.வினர், பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.
இதனிடையே, ரோதாஸ் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி கேசரி தேவி பிரதமர் மோடியை காண ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு வந்தித்தார். வயது முதிர்வு, உடல்நலக்குறைவு போன்றவற்றால் நிகழ்ச்சியை காண செல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் கேசரி தேவையை அறிவுறுத்தினர். ஆனால், குடும்பத்தினரின் அறிவுறுத்தலை மீறி பிரதமர் மோடியை காண கேசரி தேவி சென்றார்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் விருந்தினர்கள் வரிசையில் அமர கேசரி தேவிக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற கேசரி தேவி கடும் வெப்பம் காரணமாக திடீரென அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட மருத்துவக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கேசரி தேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.