மொபைல் சார்ஜ் போட்டபடியே பேசிய கோவை முதியவர் - வெடித்து சிதறிய சம்பவம்..!

சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இளைஞர் சமுதாயத்தினரே அதிகளவில் செல்போனில் மூழ்கி கிடப்பதை பார்க்க முடிகிறது. செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருந்தாலும், அதனை பலரும் கண்டுகொள்வதில்லை. செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டு சேட்டிங் செய்வது, கேம் விளையாடுவது, கால் பேசுவது என அனைத்து தவறான வேலைகளையும் சிலர் தவறாமல் செய்து வருகின்றனர்.
அதிலும் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசுவதால் கடந்த காலங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டாலும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோவை மாநகர் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 64). இவர் தன்னுடைய செல்போனை நேற்று இரவு சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது ராமச்சந்திரனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. ராமச்சந்திரன் செல்போனை சார்ஜில் இருந்து ஆஃப் செய்யாமலேயே எடுத்து பேசியுள்ளார். அவர் போன் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துவிட்டது. இதில் ராமச்சந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் உடனடியாக ராமச்சந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ராமச்சந்திரன் செல்போனை சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் பேசியதால் அது சூடாகி வெடித்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.