சிவகங்கையில் முதியவர் தலை துண்டிப்பு..!
சிவகங்கையில் 63 வயது விவசாயி சோனைமுத்து மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், காணாமல் போன தலையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது சோனைமுத்துவுடன் இருந்த மற்றொரு விவசாயி பாண்டி, அதே மர்ம நபர்களால் தலையில் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சோனைமுத்துவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டார்குடி கிராமம் பல ஆண்டுகளாகவே அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளது. குறிப்பாக, தண்ணீர் வசதி இல்லாததால் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், பெரும்பாலான கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது குறைந்த அளவிலேயே மக்கள் வசித்து வரும் இந்த ஊரில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் மர்ம நபர்கள் எளிதாக இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கான காரணம், தலை ஏன் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது, மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் மற்றும் நுண்ணறிவு பிரிவுகளும் இணைந்து இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளன.
.png)