வயதான தம்பதி கண்ணீர் மல்க மனு!
முதியவர் ராசு (வயது 74) தனது மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காவிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனது மகன்கள் என்னையும், என் மனைவியையும் சரிவரப் பராமரிக்காமல் அடித்துத் துன்புறுத்துகின்றனர். எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம், 2 மாடி வீடு போன்ற சொத்துக்கள் உள்ளன.
எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் மருமகளில் ஒருவர் நாங்கள் கட்டிய வீட்டை எங்களைக் குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும், எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். வயதான காலத்தில் எங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர்.
எனவே எனது பெரிய மகனிடமிருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர வேண்டும். அவ்வாறு மீட்டு தந்தால் 4 மகன்களுக்குப் பாகம் பிரிக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.