6 மாதங்களில் 8 உயி்ர்கள் பலி... இனியும் தமிழக அரசு உறங்கக்கூடாது: ராமதாஸ்..!
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன ஊழியர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாலும், அதனால் கடன் வாங்கியவர்களிடமிருந்து கிடைத்த அவமரியாதையாலும் மன உளைச்சல் அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சீனிவாசன் பல்வேறு தரப்பினரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அனைத்து பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நிலையில், ஆன்லைன் செயலியிலும் ரூ.2 லட்சம் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் தமது மனைவியின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் செயலியில் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், அதன் பிறகும் கடனை அடைக்கவில்லை என்று கூறி சீனிவாசனின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆன்லைன் செயலி அனுப்பியுள்ளது. பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலையும், ஆன்லைன் செயலியால் ஏற்பட்ட அவமானத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எங்கெங்கெல்லாம் கடன் வாங்கி அவமானப் படுவார்கள் என்பதற்கு சீனிவாசன் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆவார். வெறும் 31 வயது மட்டுமே ஆன சீனிவாசனின் தற்கொலையால் அவரது மனைவியும், 8 மாதக் குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள எட்டாவது உயிர் சீனிவாசன் ஆவார். தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு முறை ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிர்கள் பலியாகும் போதும் அரசுக்கு நினைவூட்டி வருகிறேன்.
ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 6 மாதங்களாகியும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.