1. Home
  2. தமிழ்நாடு

இன்று பக்ரீத் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

1

எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.

நமது நாட்டு மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. பாலஸ்தீனம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த்திப்போமாக. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை கடைபிடிக்கும் அரசாக செயல்படுவதற்கும் பிரார்த்திப்போமாக. அனைவருக்கும் நெஞ்சார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:  “நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் - சகோதரத்துவம் - அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்!ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள். நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இஸ்லாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி கே. பழனிசாமி: இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.

அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும். பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது. பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது.

அன்புமணி ராமதாஸ்: இறைபக்தியை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் சொல்லும் பாடம் தான் உலகின் பகையை ஒழிக்கும் பாடம் ஆகும். அந்த பாடத்தை நாம் அனைவரும் கடைபிடித்தால் உலகிலுள்ள அனைவரும் சகோதரர்களாகி விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் நிகழ வேண்டும் என்பது தான் அமைதியையும், மகிழ்ச்சியையும் வேண்டும் அனைவரின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும்.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி: பக்ரீத் பண்டிகை கொண்டாடும் புனித நாளில் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் கொண்டுவரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like