1. Home
  2. தமிழ்நாடு

கல்வி கடவுள் சரஸ்வதி வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்..ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..!

1

ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய ஆளுநர் ரவி "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இனி வரும் காலங்களில் டெஸ்க்கில் கல்வி கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும்" என்று கூறினார். அதுமட்டும் இன்றி சரஸ்வதி வந்தனம் பாடலை பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் "It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform" என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை விடப்பட்டு பாடப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் விடுபட்ட வார்த்தைக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய டிடி தமிழ் தொலைக்காட்சி, தவறுதலாக நடந்துவிட்டதாகவும் அதற்காக ஆளுநரிடம் மன்னிப்பு கோருவதாகவும் விளக்கம் அளித்து இருந்தது.

தமிழ்த்தாய் பாடல் விவகாரம் தொடர்பான சர்ச்சைக்கு நடுவே, ஆளுநர் மாணவர்கள் மத்தியில் கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like