எடப்பாடி சொன்ன மன்னிப்பு கடிதம் இந்த மூவருக்கு பொருந்தாது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “ராயபுரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துள்ளார் ஸ்டாலின். அந்த பகுதி மக்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் வெளிநபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. விடியா ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை. தமிழகம் அமளி பூங்காவாக உள்ளது. திமுக ஆட்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு தலைதூக்கி உள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டார். குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்தும் கடமையில் இருந்து ஸ்டாலின் தவறிவிட்டார். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட வேண்டும். திமுகவின் கைக்கூலிதான் பன்னீர். பொம்மலாட்டத்தால் அதிமுகவை எதுவும் செய்யமுடியாது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வரும் என மக்கள் கொதித்துபோய் உள்ளனர். மக்கள் எப்படி போனால் என்ன? தன் குடும்பம் நல்லா இருந்தால் போதும் என ஸ்டாலின் நினைக்கிறார். மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் மீண்டும் இணைவது பன்னீர், டிடிவி தினகரன், சசிகலாவுக்கு பொருந்தாது” என்றார்.