இன்று ஆரம்பமாகும் அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் எடப்பாடி பங்கேற்கமாட்டார்..!

‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். இதற்காக ராமேஸ்வரம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களின் ஆதரவை பெற பாதயாத்திரையை நடத்த உள்ளதாகக் கூறினார்.
பாதயாத்திரை தொடக்க விழாவில், ”பிரதமர் மோடி என்ன செய்தார்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார். தொடக்க விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் பாத யாத்திரையில் பங்கேற்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.
இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியானது.மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.