2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது - அண்ணாமலை..!
தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்வதற்காக பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தேனி வந்தார்.
டிடிவி தினகரனை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட அவர், 2024-க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக டிடிவி தினகரன் வசம் வரும் என்று கூறினார்.
"எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை கான்டிராக்டருக்காக (ஒப்பந்ததாரர்) நடத்தப்படுகிற கட்சிதான் அதிமுக. எடப்பாடி பழனிசாமி இந்தக் கட்சியை ஒப்பந்ததாரருக்கு தாரை வார்த்திருக்கிறார்.
அவர் நிறுத்தியிலுள்ள வேட்பாளர்களைப் பாருங்கள். கிளாஸ் ஏ ஒப்பந்ததாரர் மகனா, ஒரு சீட்டு. மணல் கடத்துகிறீர்களா, உங்களுடையத் தம்பி மகனுக்கு ஒரு சீட்டு, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி வரும்போது ஒப்பந்தப் புள்ளி பெற்றி கட்டுமானப் பணிகளைச் செய்தீர்களா, உங்களுக்கு சீட்டு.
உண்மையான அதிமுக தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன், 2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அந்தத் தொண்டர்கள் டிடிவி தினகரன் பக்கம் அணிவகுத்து நிற்கப்போகிறார்கள். ஜூன் 4-க்கு பிறகு இது நடக்கத்தான் போகிறது.
இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமோ, பயமோ கிடையாது. காரணம், தவறு செய்பவர்களை, தவறு செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். கட்சியை அடமானமாக நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒப்பந்ததாரர்களுக்காக கட்சி, பணம் சம்பாதிப்பதற்காக ஒரு கட்சி. கேட்டால், தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்பார்கள்" என்றார் அண்ணாமலை.