எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல..!
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டியில் பிரசார பஸ்சில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாது:- எடப்பாடி பழனிசாமி அவரது உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருப்பதாக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி இதை எத்தனை முறைதான் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்.
நான் சொந்த காலில் நின்று உழைத்து கட்சி தொண்டர்கள் ஆதரவு பெற்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அப்படியென்றால் எந்த அளவுக்கு உழைத்து இருப்பேன் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். யாருடைய சிபாரிசு மூலமும் வரவில்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்களா? என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். நாங்கள் ஒன்றும் எமாளி அல்ல... அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை.
தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையணும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. தி.மு.க.வை அகற்றவேண்டும் என்று பா.ஜ.க.வும் கருதுகிறது. அதே நிலைப்பாடோடு தான் பா.ஜ.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.