1. Home
  2. தமிழ்நாடு

இனியாவது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை..!

1

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து,  அரசு ஊழியர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.  நாட்டிலேயே அதிகமான, சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமிழகத்தில்  பணியாற்றி வருகின்றனர். தங்களது குறைகளை பலமுறை சங்கங்களின் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை அவர்களது கோரிக்கைகளுக்கு இந்த அரசு தீர்வு காணவில்லை.

 அனைத்துத் துறை ஊழியர்களும்  தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இதுவரை இந்த  அரசு,  வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர் சங்கங்களும், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும், அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின்  தனிப் பிரிவிலேயே 25-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இதனால், இவர்களது பணிகளையும் தாங்கள் கூடுதலாக கவனிப்பதாகவும், எனவே, உடனடியாக முதலமைச்சருடைய  தனிப் பிரிவு அலுவலகத்தில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. 

எனவே, கைத்தறி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், மருத்துவர் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாகக் களையவும், தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like