1. Home
  2. தமிழ்நாடு

வரும் 5-ம் தேதி கோவையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி..!

1

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்-அமைச்சர் திரு. ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 50 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தித் தராத காரணத்தால், மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மின் மயானம் பல மாதங்களாக செயல்படுவதில்லை. நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள், கான்கிரீட் சாலைகள், சாக்கடை கால்வாய்கள் தரமற்று அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதிலும், புதிய வரி விதிப்பிலும் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இங்குள்ள சாக்கடைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இங்கு வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுமில்லை. மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளால், மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியும்; நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கோடும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியவாசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 5.8.2025 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வராஜ், தலைமையிலும்; கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அருண்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சின்னராஜ், காரமடை நகரக் கழகச் செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள்; மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், காரமடை நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like