1. Home
  2. தமிழ்நாடு

உங்களைப்போல் தந்தை அடையாளத்தை வைத்து பதவி பெறுவது எல்லாம் திறமையில்ல - எடப்பாடி பழனிசாமி!

Q

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசு விழாவில் பேசும்போது, நான் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை எனப் பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகள் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். எனக்கு திறமையில்லை, விமர்சிக்க தகுதி இல்லை என்கிறார் ஸ்டாலின். கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது. நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா?

நான் சாதாரண கிளைச் செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தவன். உங்களைப்போல், தந்தை அடையாளத்தை வைத்து பதவி பெறுவது எல்லாம் திறமையில்ல. கருணாநிதியின் அடையாளத்தை வைத்துத்தான் ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனார். முதல்வர் ஆனார். நான் அப்படியில்லை. சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்தவன். உதயநிதி ஸ்டாலின் எந்த தகுதியில் அமைச்சர் ஆனார்? கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் தான் அவருக்கு எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி எல்லாம் கிடைக்கிறது.

திமுக 2021 சட்டசபை தேர்தலின்போது வெளியிட்ட அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து விட்டனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கி ரத்து செய்து விட்டனர். மடிக்கணினி திட்டம் ரத்து செய்து விட்டனர். வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துப் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.

கொரோனா காலத்தில் பாராட்டு, விருதுகளை பெற்றது அதிமுக அரசு. பல கல்லூரிகளை திறந்தோம். திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது; குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதையே காரணம். தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. சேலத்தில் தலைவாசல் பகுதியில் கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை திமுக அரசு அதனை திறக்காத திராணியற்ற ஆட்சி நடக்கிறது.

அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like