அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை தான் முதல்வர் திறந்து வைத்து வருகிறார் - எடப்பாடி பழனிசாமி..!
எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
எடப்பாடி ஆட்சியில் எந்த திட்டமும் செய்யவில்லை என தவறான தகவலை ஸ்டாலின் சொல்லி வருகிறார் என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில், கோவையில் ரூ.290 கோடிமதிப்பில் அரசு நூற்றாண்டு மருத்துவமனை, ரூ.253 கோடி மதிப்பில் ராமநாதபுரம், நொய்யல் ஆறு புனரமைப்பு, காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம், தொண்டாமுத்தூர், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட 6 இடங்களில் அரசு கல்லூரிகள், பாலக்காடு, மேட்டுப்பாளையம், அவினாசி, 4 வழிச்சாலையாக அமைத்தல்; உயர்மட்ட மேம்பாலங்கள், ரூ.3650 கோடி மதிப்பில் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திட்டம் , பவானி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டது எனக்கூறி, அதற்கு ஸ்டாலின் அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது என அவர் விமர்சித்தார்.
பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம், ஆத்துப்பாலம்-உக்கடம் மேம்பாலம், ஐ.டி.பார்க், அத்திக்கடவு-அவினாசி திட்டம், ஆகிய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டாலின் அரசு கொண்டு வந்தது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் 80% பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆனால் அதற்கடுத்து அது 32 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் வலியுறுத்தியதன் அடிப்படையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. உப்பில்லிபாளையம் - கோல்டுவின்ஸ் வரையிலான மிகப்பெரிய மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது என அவர் கருத்து தெரிவித்தார்.
கோவை மாவட்ட மக்களுக்கு ஸ்டாலின் எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்? என அவர் கேள்வி எழுப்பினார். கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் 99% பணிகள் நில எடுப்பு பணிகள் முடிந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக மத்திய அரசுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்தால் காலதாமதம் ஆனது. தற்போது தான் இந்த திட்டம் வரவுள்ளது. வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 50% பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தங்க நகை பூங்கா கொண்டு வர வேண்டும் என திமுக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதிமுக அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தது. நாங்கள் தேர்வு செய்கின்ற இடம் தொண்டாமுத்தூர் தொகுதி என்பதை கிணத்துக்கடவு தொகுதிக்கு மாற்றம் மட்டும் தான் செய்து உள்ளனர்.
தற்போது முதலமைச்சர் பல மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. அதன்பின் எவ்வாறு ஆய்வு செய்ய முடியும்? அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை தான் அவர் திறந்து வைத்து வருகிறார் என விமர்சித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நிலை மறந்து என்னை விமர்சனம் செய்கிறார். அதிமுக தவறுதலாக விமர்சனம் செய்வதில்லை. ஆனால் ஆளுங்கட்சி சேர்ந்தவர்கள் எங்களை பற்றி தவறுதலாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம் என அவர் எச்சரித்தார்.