அ.தி.மு.க. சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட 'மா' விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தங்கள் ஆகங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.
மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 'மா' விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகளைப் போக்கவும், மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.6.2025 - வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, தலைமையிலும்; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.