1. Home
  2. தமிழ்நாடு

இன்று எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கத் தேர் இழுத்த ராஜேந்திர பாலாஜி..!

Q

ஸ்ரீவில்லிபுத்தூரில், எடப்பாடி பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் ஆண்டாள் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளுடன் வாழவும், மீண்டும் தமிழக முதலமைச்சராக வரவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவிலில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த கோவிலின் ராஜகோபுரம் தான் தமிழக அரசின் முத்திரையாகும்.

கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆவார். அவர் தலைமையில் திரளான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர். தங்கத் தேரில் ஸ்ரீஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி நீடூடி வாழ வேண்டும், தமிழகத்தில் முதலமைச்சராக வேண்டும்" என்று சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அதிமுக சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் சந்திர பிரபா முத்தையா, வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிமுருகன் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் இன்று தான் (மே 12) என்றாலும் அவர் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று அறிவித்தார். இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் உருவாகியிருந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேசமயம் ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயல்பாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். நமக்காக எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும், திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

Trending News

Latest News

You May Like