அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி..!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி பிரச்சனையாக இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சனையாக இருந்தாலும் கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தடுத்து நிறுத்தியது.
காவிரி ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பி வைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க தி.மு.க. அரசு அனுமதித்தது மிகப்பெரிய துரோகமாகும்.
காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலை வனமாகும்.மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, அ.தி.மு.க. விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.