இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்..!

2024 மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வை எதிா்கொள்ளும் நோக்கில், காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, இண்டியா என்ற கூட்டணியின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க. தலைமை தீவிரமாக களப்பணியை முடுக்கி விட்டு வருகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணயில் அங்கீகரிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், அ.தி.மு.க. சார்பில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதற்காக, அவர் இன்று (செப்.14) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.