நாளை மறுநாள் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் ஜூலை 26ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தமிழ்நாடு வருகிறார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு திருச்சி வருகிறார். 26ஆம் தேதி இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அவர், மறுநாள் காலை புறப்பட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி திருச்சியில் தங்கியிருக்கும்போது ஜூலை 27ஆம் தேதி காலை அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி இதுவரை சந்திக்கவில்லை. கடந்த மே மாதம் பிரதமர் மோடி பாம்பன் புதிய பாலம் திறப்பு நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு வந்தார். கூட்டணி கட்சி என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அப்படியான சந்திப்புகள் ஏதும் நிகழவில்லை.
இந்த சூழலிலிதான் தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவித்ததன் பேரில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஏற்ற வகையில் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரை சுற்றுப் பயணத்தில் மாற்றங்களையும் செய்துள்ளார். அதாவது, ஜூலை 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை 29ஆம் தேதிக்கு மாற்றியமைத்துவிட்டார். அன்றைய தினம் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.