முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் பரிதாபாமாக உயிரிழப்பு,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை, தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை, சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார், நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு பொம்மை முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும். விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. இதை எப்போது ஆட்சியாளர்கள் உணரப் போகிறார்களோ? ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.