டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி..!

டெல்லி ஷாகேத் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் அதிமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்திற்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் அதிமுக எம்பிக்கள் இந்த அலுவலகத்தில் தங்குவார்கள் என கூறப்படுகிறது.
அதே போல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க செல்லும் போதும் இந்த அலுவலகத்தில் தங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. 25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு கிடைக்கச் செய்தது. இதையடுத்து டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் தில்லி அலுவலகத்தை திறந்துவைத்தார்.
தில்லியில் அலுவலக திறப்பு விழாவில் நேரடியாக மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.