எடப்பாடி முதல்வர்! ஓபிஎஸ் பொது செயலாளர்! நாளைய க்ளைமாக்ஸ் வெளியே கசிந்தது!

தமிழகத்தின் இருபெரும் அரசியல் தலைவர்களான ஜெயலலிதாவும், கலைஞரும் மறைந்த பின்னர், ராமராஜன் முதல் ரஜினி வரையில் சொல்வது போல தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகித் தான் போய் விட்டது. நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லை என்பதெல்லாம் போய், நல்ல ஆளுமையுடன் கூடிய அரசியல் தலைவர்களே தமிழகத்தில் இல்லை என்பதைப் போலவே நீட் தொடங்கி ஸ்டெர்லைட், இந்தி திணிப்பு என்று சகலத்திலும் பாஜகவின் கைப் பாவையாகவே தமிழக அரசு மாறிவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதில் இன்னும் கொடுமையான விஷயம், இன்றைய அதிமுக அரசுக்கு எதிரி கட்சியாக எல்லாம் வேண்டாம்... நல்ல எதிர் கட்சியாக கூட யாருமே இல்லாதது தான் வேதனையின் உச்சம் என்று உச் கொட்டுகிறார்கள் பழைய அரசியல்வாதிகள். ஜெயலலிதா இருந்திருந்தால்.. தமிழகத்தில் காலூன்ற பாஜக இப்படி பின்வாசல் வழியாக வர துணிந்திருக்குமா என்கிற குரல்கள் கேட்கிற அதே சமயத்தில் தான், கலைஞர் இருந்திருந்தால், எடப்பாடி இந்த ஐந்து வருஷத்தை நிறைவு செய்திருப்பாரா என்றும் கேட்கிறார்கள்.
மத்திய அரசியலில், ராகுலை விளையாட்டுப் பிள்ளை என்று சொல்பவர்கள், இங்கே தமிழகத்தில் ஸ்டாலினின் அரசியலையும் அப்படித் தான் சொல்கிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாளை அறிவிக்கிறார்கள்.
மீண்டும் மெளன சாமியாராக இன்னொரு சபதத்திற்கு தயாரான ஓபிஎஸ், இப்போது சமாதானமாகி விட்டதாக காதை கடிக்கிறார்கள் கழக கண்மணிகள்.
கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி பூசல்கள் என சலசலப்புகள் இல்லாமல் இருந்த அதிமுகவில் தேர்தல் நெருங்க நெருங்க, திடீரென முதல்வர் வேட்பாளர் நான் தான் என ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்கத் துவங்கினார். சண்டையில் கிழியாத சட்டை ஏது? என்பதைப் போல, இத்தனை ஆண்டுகள் துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ், திடீர் போர்க்கொடி உயர்த்த கொஞ்சம் ஆடித்தான் போனார் எடப்பாடி!
இந்நிலையில் இருதரப்பும் ஒரு வழியாக பேசி, சமரசமாக ஓர் ஒப்பந்தத்துக்கு தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக.வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம்.. தவிர தனது செல்ல மகனுக்கு மந்திரி பதவி என்று டீல் பேசியிருக்கிறார் ஓபிஎஸ். துணை முதல்வராக இருந்தாலும், தான் ஓரங்கட்டப்பட்டிருப்பதால், மகனுடைய அரசியல் அஸ்திவாரமும் பலமாக இருக்க வேண்டும் என்கிற இந்த டீல் ஏறக்குறைய சுமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.